Monday, January 25, 2016

நேதாஜி குறித்த 100 ரகசிய ஆவணங்களை பிரதமர் மோடி வெளியிட்டார்.

சுதந்திர போராட்டத் தலைவரான நேதாஜி குறித்த 100 ரகசிய ஆவணங்களை பிரதமர் மோடி நேற்று டெல்லியில் வெளியிட்டார்.
மர்மம் நீடிப்பு
இந்திய சுதந்திர போராட்டத் தலைவரும், இந்திய தேசிய ராணுவத்தை நிறுவியவருமான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1945-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 18-ந்தேதி தைபேயில் நடந்த விமான விபத்தில் உயிர் இழந்ததாக கூறப்படுகிறது. எனினும் அவர் இறக்கவில்லை, உயிருடன்தான் இருக்கிறார் என்றும் கூறப்பட்டது.
அவருடைய மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதை கண்டறிய 3 விசாரணைக் கமிஷன்கள் அமைக்கப்பட்டன. அதில் 2 விசாரணைக் கமிஷன்கள் நேதாஜி விமான விபத்தில் இறந்தது உண்மைதான் என்று தெரிவித்தன. நீதிபதி எம்.கே.முகர்ஜி தலைமையில் அமைக்கப்பட்ட 3-வது விசாரணைக் கமிஷன் விமான விபத்துக்கு பின்பும் நேதாஜி உயிருடன் இருந்தார் என்று கூறியது. எனவே நேதாஜி உயிருடன் இருக்கிறாரா? இல்லையா என்பதில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக மர்மம் நீடித்து வந்தது.
மோடி சந்திப்பு
நேதாஜி குடும்பத்தினர் இடையேயும் இதில் மாறுபட்ட கருத்துகள் நிலவியது. இதையடுத்து நேதாஜி தொடர்பாக மத்திய அரசிடம் உள்ள ரகசிய ஆவணங்களை வெளியிட வேண்டும் என்றும் வற்புறுத்தினர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நேதாஜி குடும்பத்தினரை பிரதமர் மோடி டெல்லிக்கு அழைத்து பேசினார். அப்போது, நேதாஜி தொடர்பான ஆவணங்களை வெளியிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் உறுதி அளித்தார்.
இதன் முதல் கட்டமாக நேதாஜி குறித்த 33 ரகசிய ஆவணங்களை பிரதமர் அலுவலகம் தேசிய ஆவணக் காப்பகத்திடம் வழங்கியது. மத்திய உள்துறை அமைச்சகமும், வெளியுறவு அமைச்சகமும் தங்களிடம் இருந்து பல முக்கிய ஆவணங்களை வழங்கின.
ஆவணங்கள் வெளியீடு
இவற்றை டிஜிட்டல் மயமாக்கி வெளியிட தேசிய ஆவண காப்பகம் நடவடிக்கை எடுத்து வந்தது. இந்த நிலையில் நேதாஜியின் 119-வது பிறந்தநாளையொட்டி நேற்று டெல்லியில் தேசிய ஆவண காப்பகத்திடம் இருந்த நேதாஜி குறித்த 100 ரகசிய ஆவணங்களையும் நேதாஜி குடும்பத்தினர் முன்னிலையில் டிஜிட்டல் வடிவில் பிரதமர் மோடி வெளியிட்டார்.
அதன் பிறகு மோடியும், மத்திய மந்திரிகளும் அந்த ஆவணங்களை அரைமணி நேரம் ஆய்வு செய்தனர். பின்னர் நேதாஜி குடும்பத்தினருடன் மோடி சிறிது நேரம் பேசினார்.
இது குறித்து தேசிய ஆவண காப்பக அதிகாரிகள் கூறுகையில், பொதுமக்கள் பார்வைக்காக ஒவ்வொரு மாதமும் நேதாஜி தொடர்பான 25 டிஜிட்டல் ஆவணங்களை வெளியிடுவோம் என்றனர்.
உறுதியான ஆதாரம் இல்லை
நேதாஜி குறித்த ரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்டது குறித்து நேதாஜி குடும்பத்தின் செய்தி தொடர்பாளரும், நேதாஜியின் உறவினருமான சந்திரகுமார் போஸ் நிருபர்களிடம் கூறுகையில், பிரதமர் மோடி எடுத்துள்ள நடவடிக்கைகளை மனப்பூர்வமாக வரவேற்கிறோம். இந்தியா வெளிப்படைத் தன்மையுடன் உள்ளது என்பதை நிரூபிக்கும் தினமாக இன்றைய நாள் உள்ளது என்றார்.
நேதாஜி மரணம் தொடர்பாக ஆவணங்களில் உள்ள தகவல் பற்றி அவர் கூறும்போது, எங்களால் இப்போது இந்த ஆவணங்கள் முழுவதையும் படிக்க இயலவில்லை. நேதாஜி விமான விபத்தில் இறந்ததாக கூறப்படுவது சந்தர்ப்ப சூழ்நிலை ஆதாரமாக மட்டுமே உள்ளது. அதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டார்.
நேதாஜியின் இன்னொரு உறவினரான சித்ரா போஸ் கூறுகையில், “இந்த ஆவணங்களில் காணப்படும் ஒவ்வொரு பக்கங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை. எனவே இந்தியாவின் சுதந்திர போராட்ட வரலாற்றை இதன் அடிப்படையில் மீண்டும் திருத்தி எழுத வேண்டும்“ என்று கோரிக்கை விடுத்தார்.
மோடி பாராட்டு
நேதாஜியின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி டுவிட்டரில் கூறுகையில், ‘‘நேதாஜியின் தைரியமும், தேசப்பற்றும் இந்தியாவில் தலைமுறைகள் கடந்து போற்றப்படும். இன்றைய நாள் இந்தியர்கள் அனைவருக்கும் ஒரு சிறப்பான நாள். நேதாஜி தொடர்பான ஆவணங்கள் இன்றுமுதல் வெளியிடப்படுகிறது’’ என்று குறிப்பிட்டார்