Thursday, August 3, 2017

ஆதித்த கரிகாலன்: ஆட்சி காலம்: 957-969

ஆதித்த கரிகாலன்:
ஆட்சி காலம்: 957-969
ஆதித்த கரிகாலன் இரண்டாம் பராந்தக சோழனின் மூத்த மகன் ஆவார்.
இவர் காஞ்சிபுரத்தை தலைநகராக கொண்டு சோழ சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்து வந்தார்.
பிற பெயர்: பாண்டியன் தலைகொண்டவன், வீரபாண்டிய தலை கொண்ட பரகேசரிவர்மன்
ஆதித்த கரிகாலன் சோழரது புகழ் பெற்ற மன்னருள் ஒருவனான
முதலாம் இராஜராஜனின் தமையனும் சுந்தர சோழரின் மகனுமாவான். ஆதித்த கரிகாலனுக்கு கி.பி. 966ல் சுந்தரசோழன் இளவரசு பட்டம் கட்டுகிறான். ஆதித்தன் சிறுவனாய் இருந்த பொழுதே
சிங்கம் யானையுடம் போரிடுவதைப் போல், பாண்டிய நாட்டில்
சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்ட செய்த கண்டராதித்தனின் முயற்சிகளைத் தகர்த்து தன்னுரிமையுடன் வாழ்ந்து வந்த வீரபாண்டியனுடன் போரிட்டான். புதுக்கோட்டையின் தென் எல்லையில் உள்ள, சேவலி மலைகளுக்குத் தெற்கேயுள்ள, சேவூர்ப்போர்க்களத்தில் ஆதித்த கரிகாலனது வீரம் வெளிப்பட்டதோடு, வீரபாண்டியன் தலைகொண்ட என்று கூறிக்கொள்ளவும் இவனுக்கு வாய்ப்பைக் கொடுத்தது. விசயாலய சோழன் காலத்தில் தொடங்கி ஐந்து தலைமுறைகளுக்குப்
பினனால் சோழ நாட்டிற்கு ஓயாத தொல்லையாக இருந்த இரு பெரும் அரசுகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது இவன் காலத்தில்தான். ஆதித்த கரிகாலன் தன் அந்தஸ்துக்கு போதவில்லை என கருதி காஞ்சியில் பல்லவச் சக்கரவர்திகள் பல தலைமுறையாக வாழ்ந்து ராஜ்யபாரம் புரிந்த அரண்மனைகளை விட்டு பொன்னிழைத்த அரண்மனையை கட்டி வைடூரியங்களையும் இரத்தினங்களையும் சுவர்களில் பதிக்கிறான். தன்னுடைய அருமந்த புத்திரன் ஆதித்த கரிகாலன் இறந்த சோகத்தில் சுந்தரசோழன் தன் மகன் கட்டிய காஞ்சி பொன்மாளிகையில் தனித்திருந்து உயிர் துறக்கிறான். இதனால் சுந்தரசோழனை பொன்மாளிகைத் துஞ்சின தேவர் இன கல்வெட்டு விளம்புகிறது.
ஆதித்த கரிகாலன் கொலை
தமிழக வரலாற்றில் ஒரு அழியாத கறையை அளித்துச் சென்றுவிட்ட நிகழ்வு ஆதித்த கரிகாலன் கொலை. அவன் கொலை செய்யப்பட்டானா, தற்கொலையா, இயற்கையான மரணமா? என்ற கேள்விகள் எழுகின்றன. தற்கொலை செய்துகொள்ள வேண்டிய சூழலும், இயற்கையான மரணம் ஏற்படக்கூடிய வயதும் காரணமும் இல்லாத நிலையில் கொலை செய்யப்பட்டான் என்றே முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது. அரச குடும்பத்தை நோக்குங்கால், சுந்தர சோழர் நேரடியாக போர்களில் பங்கேற்கவில்லை. அருள்மொழிவர்மன் இளைஞன். மதுராந்தகனான உத்தமனும் போர்களில் பங்கெடுக்க வில்லை. வீரத்தைக் காட்டி எதிரிகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கிய ஒரே அரச வாரிசு ஆதித்த கரிகாலன் மட்டுமே. வீர பாண்டியனைக் கொன்றதுடன் ராஷ்டிர கூடர்களைத் தடுத்து நிறுத்தும் தன்மையும் பெற்றிருந்தான். மேலும் யுவராஜனாக பட்டமேற்றுக்கொண்டதால் சுந்தர சோழனுக்குப் பிறகு அவன் ஆட்சியில் எதிரிகள் நிலை மேலும் மோசமாகலாம் என்ற நிலை இருந்தது. இந்தப் பின்னணியில் பார்க்கும் போது சோழர்களின் வளர்ச்சியை விரும்பாதவர்களுக்கு முதல் குறி ஆதித்த கரிகாலன் தான் என்பது தெள்ளத் தெளிவாக விளங்கும். ஆதித்த கரிகாலனுக்கு சோழ மன்னனாக முடிசூட்டிக் கொள்வதில் ஆர்வமில்லை. அதனால் தன் தம்பி அருள்மொழிவர்மனை ஈழத்திலிருந்து அழைத்து வந்து சோழ மன்னனாக அமரச் செய்துவிட்டு, தான் பெரும்படை திரட்டி நாடுகள் பலவும் கைப்பற்றி உலகெங்கும் புலிக் கொடியைப் பறக்கச் செய்ய வேண்டும் என்று ஆசை கொள்கிறான். மறுபுறமோ சூழ்நிலைகளை உற்று நோக்கும் போது உத்தமசோழனுக்கு இந்தக் கொலையில் தொடர்பு இல்லையென்று கூறுவதற்கில்லை. உத்தமசோழனுக்கு, அரியணை ஏற வேண்டும் என்ற ஆசை இருந்தது. மன்னர் பதவி தவிர, அதற்குக் கீழ்ப்பட்ட எப்பதவியையும் அவன் ஏற்க விரும்பவில்லை, அரச குடும்பத்தின் மூத்த கிளை என்று அவன் கருதினான். தன் ஒன்று விட்ட சகோதரனும் அவன் மக்களும் அரியணையைத் தன்னிடமிருந்து பறித்துக் கொண்டதாகக் கருதினான். தனக்கு ஆதரவாக ஆட்களைத்திரட்டி இரண்டாம் ஆதித்தனைக் கொன்று தன்னை இளவரசனாக்குமாறு சுந்தர சோழனை வற்புறுத்தினான். வேறுவழியின்றி சுந்தர சோழன் இதற்கு இசைந்தான். திருவாலங்காட்டுப் பட்டயங்களிலும் உடையார்க்குடிக் கல்வெட்டுகளிலும் காணப்படும் குறிப்புக்களை இணைத்துபார்க்கும் பொழுது இந்த நிகழ்ச்சிகள் உண்மையாக இருக்கக்கூடும் என்பது புலனாகிறது.
மேலும் சோழ மன்னர்கள் யாவருமே திருக்கோயில்களுக்குப் பொன்வேய்ந்திருக்கிறார்களே தவிர தமக்கென்று யாரும் பொன்மாளிகை கட்டிக் கொண்டதில்லை. முதல் பராந்தகன் தில்லைத் திருக்கோயிலுக்குப் பொன்வேய்ந்தான். முதலாம் இராசராசன் த்ன்னுடைய 29ம் ஆட்சியாண்டில் போர் வெற்றிகள் மூலம் கிடைத்த 41,500 கழஞ்சுப் பொன்னையும் 50,650 கழஞ்சு வெள்ளியையும் தஞ்சைப் பெருவுடையார் கோயிலுக்கு அளித்தான்.இரண்டாம் குலோத்துங்கன் தன்னுடைய முடிசூட்டு விழாவையே தில்லைத் திருக்கோயிலிலேயே நடத்தினான். அனால் ஆதித்த கரிகாலனோ தனக்கு பொன்னிழைத்த அரண்மனையை காஞ்சியில் கட்டியது அரச குலத்தில் புளுதியை கிளப்பியது. ஆதித்த கரிகாலனின் செய்கை பின்னால் வரும் மன்னர்களுக்கு முன்னுதாரணமாக அமைந்து விட்டால் என்ன செய்வது என்று அரச அதிகாரிகள் திகைத்தனர். இதுவும் ஆதித்த கரிகாலன் கொலைக்கு காரனமாகஇருக்கலாம். சிதம்பரம் தாலுகா காட்டுமன்னார் கோயிலுக்கு அருகிலுள்ள உடையார்குடியில் காணப்படும் கல்வெட்டு ஒன்று கொலை செய்தவர்களின் பெயர்களை பட்டியல் இடுகிறது.
1. சோமன்
2. ரவிதாசனான பஞ்சவன் பிரமாதிராஜன்
3. பரமேசுவரனான இருமுடிச்சோழன் பிரமாதிராஜன்
4. ரேவதாசக் கிரமவிந்தன்.
இவர்கள் அனைவரும் சகோதரர்கள் மற்றும் அரச உயர் அதிகாரிகள், இக்கொலையின் மூலம் ஆட்சியும், சமய கோட்பாடுகளும் குலையுமே என கருதி இக்குற்றங்கள் மறைக்கப்பட்டு வெளிச்சத்திற்கு வரவில்லை.இக்கொலை சுந்தரசோழன் மற்றும் இராசராசசோழனுக்கும் தெரியாமல் நடந்திருக்கும் என்றும் இதனால் தான் உத்தமசோழன் முடி தரித்தான் என்றும் அறியப்படுகிறது.இதன் பின் அரியனை ஏறிய உத்தமசோழன் இக் கொலையாளிகளை தண்டிக்கவில்லை. இராசராசன் அரியனை ஏறிய இரண்டாம் ஆண்டில் உயிருடன் இருந்த இருவர் மட்டும் தண்டிக்கப்பட்டதாக உடையார்குடி கல்வெட்டால் அறியமுடிகிறது. மேலும் கொலையாளிகள் யார், கொலைக்கான காரணங்கள் எல்லாம் பலவடிவத்திலும்,வியுகத்திலும் இருப்பதினால் அதற்கென்றே ஒரு தனி பதிவு தொகுத்து வழங்கவேண்டும்.

No comments:

Post a Comment