Wednesday, February 24, 2016

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் உதவியாளர் மா.குருசாமி பிள்ளை


திருச்சுழி குருசாமி பிள்ளை - வயது 89. பிறப்பால் தேவர் சாதி இல்லை. ஆனாலும் தேவரின் நம்பிக்கைக்குரிய சீடர்களில் இவரும் ஒருவர். 15 வயதிலேயே தேவரைப் போல ஜிப்பா அணிந்து அவரின் அடி தொட்டு நடந்தவர் குருசாமி பிள்ளை. இவருக்கு 4 மகன்கள், 3 மகள்கள். தையல்காரரான குருசாமி பிள்ளை குடும்பத்துக்காக தையல் மிஷின் மிதித்துக் கொண்டே தேவருக்கு பெட்டி தூக்கினார்.
பிரிக்கப்படாத ராமநாதபுரம் மாவட்டத்தில் தேவருக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் சொந்தமாக இருந்தது. அவற்றில் 1,137.27 ஏக்கர் போக மீதியை தனது உறவினர்கள், விசுவாசிகள் என 16 பேருக்கு 1960-ல் தானமாக எழுதி வைத்தார் தேவர். அந்த வகையில் குருசாமி பிள்ளைக்கும் நரிக்குடி அருகே புளிச்சி குளத்தில் 120 ஏக்கர் நிலம் கிடைத்தது.
பிறகு நடந்தவற்றை விவரிக் கிறார் அகில இந்திய ஃபார்வர்டு பிளாக்கின் முன்னாள் மாநிலத் தலைவர் நவமணி: “சொத்துகளைப் பிரித்துக் கொடுத்த சில நாட்களி லேயே தேவர் படுத்த படுக்கையாகி விட்டார். அப்போது மதுரை திருநகர் வீட்டில் இருந்த அவருக்கு ஒரு தாயைப் போல இருந்து அனைத்துப் பணிவிடைகளையும் செய்தார் குருசாமி பிள்ளை. தேவர் மறைவுக்குப் பிறகு, அவரது விசுவாசிகள், தேவர் பெயரில் அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்தினார்கள்.
தேவரின் விசுவாசிகள் அனைவரும் தங்களுக்கு தேவர் தானமாக கொடுத்த சொத்துகளை அப்படியே அறக்கட்டளைக்குத் திருப்பிக் கொடுத்தார்கள். தையல் மிஷின் ஓடினால்தான் வீட்டில் அடுத்த வேளைக்கு அடுப்பு எரியும் ஏழ்மையில் இருந்த குருசாமி பிள்ளையும் தனது 120 ஏக்கரை திருப்பிக் கொடுத்தார்.
அப்படிப்பட்ட மனிதர் இப்போது கண்டுகொள்ளப்படாமல் கஷ்ட ஜீவனத்தில் இருக்கிறார். பிள்ளைகளின் வருமானம் அவரவர் குடும்பத்தை கொண்டு செலுத்தவே சரியாக இருக்கிறது. தேவர் பெயரைச் சொல்லி அரசியல் செய்பவர்கள், அவருக்காக தனது வாழ்க்கையையே தியாகம் செய்த குருசாமி பிள்ளையை கண்டுகொள்ளவில்லை. தனக்கு ஏதாவது கஷ்டம் என்றால் எங்களைப் போன்ற நண்பர்களுக்கு போன் போடுவார். எங்களால் முடிந்த உதவிகளைச் செய்வோம். அவருக்கு முதியோர் உதவித் தொகை வாங்கிக் கொடுக்க முயற் சித்தோம். ஆனால், வாரிசுகள் இருப்பதாகச் சொல்லி, தர மறுத்து விட்டார்கள்’’ என்றார் நவமணி.
தேவரோடு இருந்த நாட்களை நம்மிடம் பகிர்ந்து கொண்ட குருசாமி பிள்ளை, ’’எனக்கு 120 ஏக்கரை தேவர் பத்திரம் பதிந்து கொடுத்தபோது உடனிருந்த அவரது உறவினர் ஒருவர், ‘இவரு நம்ம ஆளு இல்லையே.. பிள்ளைமாருக்கு எதுக்கு சொத்தை எழுதுறீங்க?’ன்னு கேட்டார். அதற்கு, ‘இவன் என் கூடவே இருக்கிறவன்டா. இவனுக்கும் ஒரு பங்கு குடுக்கணும்’ என்று சொன்னார் தேவர்.
அவ்வளவு பெரிய மகான் கூட இருந்துட்டேன். அதைவிட எனக்கு வேறென்ன தம்பி வேணும்? அந்த 120 ஏக்கர் நிலத்தின் இன்னிய மதிப்பு ரூ.150 கோடி. அதைத் திருப்பிக் கொடுத்ததுக்காக கமுதி தேவர் கல்லூரி அறக்கட்டளையில என்னை ஆயுட்கால உறுப்பினரா போட்டாங்க. அதனால எனக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை. கஷ்ட ஜீவனம் நடத்துனாலும் அம்பது வருசமா திருச்சுழியில நான்தான் தேவர் குருபூஜையை நடத்துறேன். என் ஆயுள் உள்ள வரைக்கும் அது நடக்கும்’’ என்று சொன்னார்.
கள்ளர் முரசு

No comments:

Post a Comment