Wednesday, February 24, 2016

மதுரையின் முதுபெரும் சுதந்திரப் போராட்டத் தியாகியும், பத்திரிகையாளருமான ஐ.மாயாண்டிபாரதி


இருளப்பன், தில்லையம்மாள் தம்பதிக்கு மகனாக மதுரையில் 1917ஆம் ஆண்டு பிறந்தார். அவர் 10-ஆம் வகுப்பு படிக்கும்போதே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
1937-இல் திருப்பூர் குமரனுக்கு நினைவுச் சின்னம் கோரி எழுதிய துண்டறிக்கை மூலம் ராஜபாளையத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டின் கவனத்தை ஈர்த்த அவர், 1939-இல் லோக்சக்தி இதழில் கம்பெனியைக் கலக்கிய கட்டபொம்மன், படுகளத்தில் பாரததேவி ஆகிய கட்டுரைகள் எழுதி தேச விரோத சட்டத்தில் கைதானார். அதன்படி, 13 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார்.
பாரதசக்தி, லோக்சக்தி, லோகோபகாரி, நவசக்தி பத்திரிகைகளில் எழுதிய அவரது கட்டுரைகள் சுதந்திரப் போராட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.
1931, 1932-ஆம் ஆண்டுகளில் சட்டமறுப்பு இயக்கம், கள்ளுக்கடை மறியல் ஆகியவற்றில் ஈடுபட்டு சிறை சென்றார். 1940-இல் இரண்டாம் உலகப் போர் எதிர்ப்புப் பிரசாரத்தில் ஈடுபட்டு கைதானார்.
1941-இல் பொதுவுடமை அரசு வேண்டும் என பிரசாரம் செய்து கைதானார். 1942-இல் வெள்ளையனே வெளியேறு இயக்கப் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார். தொடர்ந்து 1944-ஆம் ஆண்டு வரை அவர் சிறையிலேயே கழித்தார். சுதந்திரத்துக்குப் பிறகு கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றார்.
குடியரசு முன்னாள் தலைவர்களான நீலம் சஞ்சீவ ரெட்டி, ஆர்.வெங்கட்ராமன், முன்னாள் முதல்வர் காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், என்.ஜி.ரங்கா, பட்டாபி சீதாராமையா, தியாகி ஏ.வைத்தியநாதய்யர், சர்தார் வேதரத்தினம் பிள்ளை, ஜீவா, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், ம.பொ.சிவஞானம், எஸ்.கல்யாணசுந்தரம், வேதநாயகம் பிள்ளை, ஆர்.உமாநாத் உள்ளிட்ட பல தலைவர்களுடன் சிறையில் இருந்துள்ளார்.
சிறையிலும், வெளியிலும் அவர் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து, "போருக்குத் தயார்', "படுகளத்தில் பாரததேவி', "வெள்ளையனே வெளியேறு', "அரசு என்றால் என்ன', "பாரதத் தாயின் விஸ்வரூபம்', "வெடிகுண்டும் வீரத் தியாகிகளும்', "தூக்குமேடை பாலு', "கட்டிவைத்துச் சுட்டுக் கொல்லப்பட்ட தியாகிகளின் வரலாறு' ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

No comments:

Post a Comment