என் சொந்த ஊர், பட்டுக்கோட்டையை அடுத்த மன்னங்காடு. நான் சிங்கப்பூரில் 14 ஆண்டுகள் வசித்துள்ளேன். 10 வயது இருக்கும் போது, சுதந்திர போராட்டம் தீவிரமாக இருந்தது. தனியொருவராக, சர்தார் வேதரத்தினம், எங்கள் ஊருக்கு, உப்பு சத்தியாகிரக நடைபயணம் மேற்கொண்டார். நான் அவருடன், 2 கிலோ மீட்டர் தூரம் நடந்தேன். அப்போதே, சுதந்திர போராட்டத்தில் பங்குபெறும் எண்ணம் என்னுள் தீப்பொறியாய் எழுந்தது. 13 வயதில், சிங்கப்பூர் சென்றேன். அங்கு தினசரி பேப்பர் போடும் வேலை கிடைத்தது. அங்கு வக்கீல் கோகோ தலைமையில், 100 பேர் இணைந்து, "இந்தியன் இளைஞர் கழகம்' உருவானது. அதில் நானும் ஒருவன். எங்களுக்கு, "ஸ்கவுட் பாய்' பயிற்சியும், கட்டைத் துப்பாக்கி சுடும் பயிற்சியும் கிடைத்தது. 1939ல் நடந்த இரண்டாம் உலகப் போரில், ஜப்பான், சிங்கப்பூரை தாக்கிய போது, போரில் காயமடைந்த இந்தியர்களை காப்பாற்றும் வேலையை, எங்கள் கழகம் செய்தது. நான் நிறைய பேரை காப்பாற்றினேன். நேதாஜி சிங்கப்பூர் வந்தார். ஐ.என்.ஏ., படையை விரிவுபடுத்தினார். மூன்று ஆண்டுகளில், பல தடவை நேதாஜியை நேரில் பார்த்தேன். கேப்டனுடன் தான் பேசுவார். அவரைப் பார்ப்பதே பிரமிப்பாக இருக்கும். அவருக்கு இணையாக இந்த உலகில், வேறு யாரையுமே சொல்ல முடியாது. கடந்த 1945ல், சிங்கப்பூர் ஐ.என்.ஏ., தலைமை கேம்ப்பில், எங்கள் மத்தியில், அரை மணி நேரம் பேசினார். நாங்கள் நேதாஜியைக் கடைசியாக பார்த்தது அப்போது தான். அந்த மீட்டிங் உருக்கமாக இருந்தது. கூட்டம் முடிந்து விமானம் ஏறிப்போனவர் தான். அதன் பின், நேதாஜி என்ன ஆனார் என்பதே தெரியவில்லை.
No comments:
Post a Comment