.
"பெண்ணடிமை தீருமட்டும்
பேசும் திருநாட்டில்
மண்ணடிமை தீர்தல் முயற்கொம்பே!'
என்பார் பாவேந்தர் பாரதிதாசன்.
சிலிர்க்க வைக்கும் ஒரு வரலாற்றுச் சம்பவத்தைப் பாருங்கள்.
பசும்பொன் முத்துராமலிங் கத் தேவர் ஒருமுறை பர்மா சென்றிருந்தார். நேதாஜியின் தேசிய இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட அவர், அரசியல்ரீதியாக அங்கு சென்றிருந்தார். அதனால் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க அந்த நாட்டு அரசாங்கம் விரும்பியது.
சிவப்புக் கம்பள மரியாதை கொடுப்பது சிறந்த வரவேற்பு என்று நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். அந்த நாட்டில் வேறொரு வழக்கம் இருந்தது- கறுப்புக் கம்பள வரவேற்பு! அதுவும் எப்படித் தெரியுமா? நீண்ட கூந்தலுள்ள அழகான இளம் பெண்கள் வரிசையாக அமர்ந்து, தலையைக் குனிந்து தரையில் தலைமுடியைப் பரப்பி இருப்பார்கள்.
அதேபோல் எதிர் வரிசையிலும் பெண்கள் அமர்ந்து தலைமுடியைப் பரப்பி இருப்பார்கள்.
இரண்டு வரிசையிலும் உள்ள பெண்களின் தலைமுடிகள் இணைந்து, கறுப்புக் கம்பளம் போல் காட்சி தரும். சிறப்பு விருந்தினர் அதன் மீது நடந்து செல்ல வேண்டும். அதுவரையிலும் அந்தப் பெண்கள் தரையை நோக்கி தலை, கைகளை வைத்து குனிந்தபடியே இருக்க வேண்டும்.
இப்படிப்பட்ட வரவேற்பு தேவர் பெருமகனாருக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த இடத்துக்கு வந்தபிறகுதான் இந்த ஏற்பாடு பற்றி அவருக்குத் தெரியும்.
அதைக் கண்டதும் அவர் துணுக்குற்றார். "இது என்ன கொடுமை! பெண்களைச் சிரமப்படுத்தி இப்படி உட்கார வைத்திருப்பது பெரிய பாவம்! அதுமட்டுமல்ல... அவர் களின் கூந்தல்மேல் நடந்து செல்ல வேண்டும் என்பது அதைவிடப் பெரிய பாவம்! அந்தப் பாவத்தை நான் செய்ய மாட் டேன். உடனே இதைத் தடுத்து நிறுத்துங் கள்' என்று அரசருக்கு வேண்டுகோள் விடுத்தார்.
அரசருக்கு ஒரே ஆச்சரியம்! இதுவரையிலும் யாரும் சுட்டிக் காட்டாத இந்த விஷயத்தை இவர் மனிதாபிமானத்தோடு சிந்தித்து இருக்கிறாரே என்று நினைத்து, உடனே அந்த வரவேற்பு முறையை நிறுத்த ஏற்பாடு செய்தார்.
பிறகு, விருந்துக்கு ஏற்பாடு நடந்தது. தேவரோ, "கறுப்புக் கம்பள' பிரச்சினையை அதோடு விட்டுவிடவில்லை.
"எனக்கு மட்டுமல்ல; இனிமேல் யாருக்கும் இதுபோன்ற வரவேற்பு கொடுக்க வேண்டாம்' என்று வற்புறுத்தினார். "பெண்களை அடிமைப் படுத்தும் நாடு உயர்வடைவதில்லை' என்பதை யும் வலியுறுத்தினார்.
"இதற்கு ஒப்புக்கொண்டால் விருந்தில் கலந்து கொள்வேன்' என்று உறுதியாகச் சொல்லி விட்டார். அந்த உணர்வை- மனித நேயத்தைக் கண்டு மன்னர் சிலிர்த்துப் போனார். அதற்குப் பிறகு அந்த முறையையே அடியோடு ஒழித்து விட்டார்களாம்.
No comments:
Post a Comment