காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் பலி ஆனார். அவரது
உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.
கார்கில்,
காஷ்மீர் மாநிலத்தில் இமயமலையில் சியாச்சின் பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த 4 ராணுவ வீரர்கள் உள்பட 10 பேர் பலி ஆனார்கள்.
பனிச்சரிவில் சிக்கிய ராணுவ வீரர்கள்
அதே போன்ற ஒரு சம்பவம் அங்கு மீண்டும் நடந்து உள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக் பிராந்தியத்தில் கடந்த 17-ந் தேதி இரவு 10.45 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது சில இடங்களில் பனிச்சரிவு ஏற்பட்டது. கார்கில் பகுதியில் 17 ஆயிரத்து 500 அடி உயரத்தில் உள்ள ஒரு ராணுவ சாவடியின் மீது பனிப்பாறைகள் சரிந்து விழுந்தன.
இதில் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த 2 ராணுவ வீரர்கள் சிக்கினார்கள். சரிந்து விழுந்த பனிப்பாறைகள் அவர்களை சிறிது தூரம் இழுத்துச் சென்றன. இதனால் வெளியே வர முடியாமல் பனிப்பாறைகளுக்கு அடியில் சிக்கிக்கொண்டனர். அவர்களால் வெளியே வர முடியவில்லை.
மீட்புப்பணி
இது பற்றிய தகவல் கிடைத்ததும் அந்த இடத்துக்கு ராணுவ மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். மோப்ப நாய், மெட்டல் டிடெக்டர் மற்றும் ரேடார் கருவியின் உதவியுடன் அவர்கள் இருவரையும் மீட்கும் முயற்சிகளை மேற்கொண்டனர்.
சுஜித் என்ற சிப்பாய் பனிக்கட்டி குவியல்களுக்கு அடியில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டார். உடனடியாக அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழக வீரர் பலி
இதற்கிடையே, மற்றொரு வீரரை மீட்கும் முயற்சியில் மீட்புக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டனர். ஆனால் அவரை உயிருடன் மீட்க முடியவில்லை. பனிக்கட்டி குவியலுக்குள் 12 அடி ஆழத்தில் புதைந்து கிடந்த அவரை நேற்று மீட்புக்குழுவினர் பிணமாக மீட்டனர்.
பனிச்சரிவில் சிக்கி பலியான அந்த வீரர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அவரது பெயர் கே.விஜயகுமார் (வயது 23). சிப்பாய் ஆக பணிபுரிந்து வந்த விஜயகுமார் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வல்லராமபுரத்தைச் சேர்ந்தவர்.
இவரது தந்தை பெயர் கருத்தபாண்டி தேவர். விவசாயம் செய்து வருகிறார். தாயார் பெயர் முத்துக்குட்டி அம்மாள். பிளஸ்-2 வரை படித்துள்ள விஜயகுமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ராஜேஷ்வரி, சுமதி என்ற இரு தங்கைகள் உள்ளனர். இருவரும் நர்சிங் டிப்ளமோ படித்து வருகிறார்கள்.
ராணுவ அதிகாரி தகவல்
விஜயகுமார் கடந்த 2014-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார். சென்னையில் ராணுவத்துக்கு ஆள் எடுக்கும் போது அவர் தேர்வு செய்யப்பட்டார். அவருடன் அதே வல்லராமபுரத்தைச் சேர்ந்த வெள்ளதுரை, ரமேஷ், ராஜா, மகேஷ் ஆகியோரும் தேர்ந்து எடுக்கப்பட்டனர். இவர்கள் 5 பேரும் கார்கில் அருகே உள்ள கன்னா சவுக் என்ற இடத்தில் பணியாற்றி வந்தனர்.
சில தினங்களுக்கு முன் விஜயகுமார் தவிர மற்ற 4 பேரும் சொந்த ஊரான வல்லராமபுரத்துக்கு வந்தனர். விஜயகுமார் மட்டும் வரவில்லை. இந்த நிலையில் அவர் பனிச்சரிவில் சிக்கி பலியாகி விட்டார்.
நேற்று முன்தினம் இரவு ராணுவ அதிகாரி ஒருவர், விஜயகுமார் பனிச்சரிவில் சிக்கி இருப்பதாகவும், அவரை மீட்கும் பணி நடந்து வருவதாகவும் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார். விஜயகுமாரின் உடல் மீட்கப்பட்ட தகவல் நேற்று மதியம் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது.
பெற்றோர் கதறல்
விஜயகுமார் மரணம் அடைந்த தகவல் அறிந்ததும் அவரது குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர். விஜயகுமாரின் போட்டோவை கட்டிப்பிடித்தவாறு தாயும், தந்தையும் கதறி அழுதது பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது.
விஜயகுமாரின் தங்கை ராஜேஸ்வரி சோகம் தாங்காமல் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை உறவினர்கள், அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
விஜயகுமாரின் உடலை அவரது சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க ராணுவ அதிகாரிகள் ஏற்பாடு செய்து உள்ளனர். விஜயகுமாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாக வடக்கு பிராந்திய ராணுவ தளபதி டி.எஸ்.ஹூடா கூறினார்.
விஜயகுமாரின் இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் நடைபெற உள்ளது.
விஜயகுமாரின் தாய்மாமனார் சண்முகையா கூறியதாவது:-
தந்தையுடன் பேசினார்
எங்கள் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நாட்டுக்காக சேவையாற்ற வேண்டும் என்ற உணர்வுடன் ராணுவத்தில் சேர்ந்து வருகிறார்கள். வல்லராமபுரத்தைச் சேர்ந்த 50-க் கும் மேற்பட்டோர் ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். உள்ளூரில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு வரை படித்த விஜயகுமார் பிளஸ்-2 வரை நடுவக்குறிச்சி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தான். மேற்கொண்டு படிக்காமல், ராணுவ வேலைக்கு செல்ல வேண்டும் என்று முயற்சித்து, சிப்பாயாக ராணுவத்தில் சேர்ந்தார்.
கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஊரில் நடந்த கோவில் விழாவுக்கு வந்திருந்தார். கடைசியாக கடந்த 17-ந் தேதி தன்னுடைய தந்தையுடன் செல்போனில் பேசி இருக்கிறார். அதன் பிறகுதான் பனிச்சரிவில் சிக்கி இருக்கிறார். விஜயகுமார் இறந்துவிட்ட சம்பவம் எங்கள் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
No comments:
Post a Comment