Sunday, March 13, 2016

தேவரை தியேட்டருக்கு வரவழைத்த வாசன்!


பிரமாண்ட படைப்பாக 1953-ல் ஔவையார் படத்தை வாசன் தயாரித்தார்.
ஔவையார்' படம் வெளியானபோது வாசனின் தீர்க்க தரிசனமும், தேர்ந்த சினிமா சிந்தனையும் வெளிப்பட்டது. ஆம்! 'ஔவையார்' வேடத்தில் அற்புதமாக பாடி, அருமையாக நடித்திருந்ததோடு வயதிலும், தோற்றத்திலும் கே.பி.சுந்தராம்பாள் கனக் கச்சிதமாக பொருந்தி இருந்தார்.
அதுவரை எந்த சினிமாப் படத்தையும் பார்த்திராத தேவர், சிவகங்கையிலுள்ள ஶ்ரீராம் தியேட்டருக்கு சென்று படம் பார்த்தார். தியேட்டர் பால்கனியில் தன் நண்பர் ஒருவருடன் அமர்ந்திருந்த தேவரைப் பார்த்த தியேட்டர் முதலாளி, திக்குமுக்காடிப் போய் விட்டார். இரண்டாவது முறையும் இந்தத் தியேட்டருக்கு வந்து 'ஔவையார்' படத்தை தேவர் ரசித்துப் பார்த்தார். அதுவரை தேவர் எந்த சினிமாவுக்கும் சென்றதில்லை என்பார்கள். தேவரை சினிமா பார்க்க வைத்து சாதனை படைத்தவர் எஸ்.எஸ்.வாசன். தனது படத்தை 2 முறை பார்த்ததற்காக தேவருக்கு கடிதம் எழுதியும் நன்றி தெரிவித்தார் வாசன்.
கே.பி.சுந்தராம்பாளின் நடிப்பு தமிழகமெங்கும் சிலாகித்து பேசப்பட்டது. சங்க காலத் தமிழ் மூதாட்டியான ஔவையாரின் வரலாற்றை 'செல்லுலாய்டில்' பதிவு செய்த பெருமை பெற்றார் வாசன்.
ஔவையார் திரைப்படத்திற்கு தமிழறிஞர்களிடமிருந்தும் ஆன்மிகவாதிகளிடமிருந்தும் பாராட்டு கிடைத்தது. ராஜாஜி, முத்துராமலிங்க தேவர், ம.பொ.சி., 'கல்கி' கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் வாசனுக்கு பாராட்டு மழை பொழிந்தனர்.
அனைத்துத் தரப்பு மக்களும் பாராட்டும்படியாக 'ஔவையார்' படத்தை ஒரு வெற்றிப்படமாக்கினார் வாசன்.

No comments:

Post a Comment