Friday, July 28, 2017

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நூற்றாண்டு ஜெயந்தி விழா...

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நூற்றாண்டு ஜெயந்தி விழா...
தேவர் திருமகனாரின் நூற்றாண்டு ஜெயந்தி விழா, கொண்டாடப்படுகிறது. அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசியமும், தெய்வீகமும் தனது இரு கண்கள் என்று பிரகடனப்படுத்தி, தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்த உத்தமத் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் 100வது ஆண்டு ஜெயந்தி விழா மிகப் பிரம்மாண்டமாக கொண்டாடப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
நெஞ்சத் துணிவில், அரசியல் சிந்தனையில், தீர்க்கதரிசனப் பார்வையில், மாண்புமிக்க மனிதநேயப் பண்பில், ஆன்மிகத்தின்பால் கொண்டிருந்த தளராத பக்தியில், ஈடு இணையற்ற தலைவராக சுடர் விட்டவர் தேவர் திருமகனார் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஓர் இயக்கத்தை தொடங்கி 10 ஆண்டுகள் கழித்து பெறக்கூடிய பலனை, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை வைத்து ஒரு பொதுக்கூட்டம் நடத்தினால் பெற்றுவிடலாம் என்று மூதறிஞர் ராஜாஜியால் புகழப்பட்டவர் தேவர் திருமகனார் - வெள்ளையர் ஏகாதிபத்திய அரசு, ரேகை சட்டம் என்ற பெயரில் மறவர்கள் மீதும், கள்ளர்கள் மீதும் கடுமையான, குற்றப் பரம்பரைச் சட்டத்தை ஏவியபோது அதனை எதிர்த்து குரல் கொடுத்து 17 ஆண்டுகாலம் போராடி தமிழகத்தில் ரேகை சட்டத்தை அறவே அகற்றி வெற்றி கண்டவர்தான் தேவர் திருமகனார் - ஹிந்துத் தாயின் வயிற்றிலே பிறந்து, இஸ்லாமியரின் மடியிலே தவழ்ந்து, கிறிஸ்தவரின் அரவணைப்பிலே கல்வி கற்று வளர்ந்து, இந்திய நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் வீரத் தளபதியாய் வெற்றி வாகை சூடியவர்தான் தேவர் திருமகனார் - வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் தத்துவத்தால் ஈர்க்கப்பட்டு, விடுதலைப் போராட்டத்தில் வீர முழக்கமிட்ட சுபாஷ் சந்திரபோஸின் கொள்கையால் கவரப்பட்டு, ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு, அறுபடை வீடுகளில் ஆட்சி செய்யும் தமிழ்க் கடவுள் முருகனின் திருவுருவாகத் திகழ்ந்தவர்தான் தேவர் திருமகனார் - வாழ்நாள் முழுதும் நீதிநெறி தவறாமல் வாழ்ந்து, துறவியாக தனிமையில் சுடர்விட்டு, மொழி ஆற்றலில் கர்ஜிக்கும் சிங்கமாய் பவனி வந்து, வாரிக்கொடுக்கும் வள்ளல் தன்மைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கி, பிறருக்கு பரிவு காட்டுவதில் தாயாக, அன்பு செலுத்துவதில் தாதியாக விளங்கி, தொண்டுள்ளத்தோடு, மக்கள் பணியாற்றிய மனிதாபிமானி தேவர் திருமகனார் எனவும் புகழாரம் சூட்டியுள்ள செல்வி ஜெயலலிதா, தேவர் திருமகனாரின் மகத்தான பண்பு நலனைக் கண்டு போற்றி வணங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஞானமும், பெருந்தன்மையும், தலைவருக்கே உரிய அபூர்வ பண்புகளையும் பெற்ற தேவர் பெருமகனார், பதவிக்காக ஒருபோதும் ஆசைப்பட்டவரே அல்ல என்று குறிப்பிட்டுள்ள செல்வி ஜெயலலிதா, அத்தகைய தியாக சீலரின் பணிகளை அறிந்து, அவரது பெருமைகளைப் பாராட்டும் விதமாகத்தான் தேவர் ஜெயந்தி விழாவில் தாம் ஆண்டுதோறும் கலந்து கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். 55 ஆண்டுகள் இப்பூவுலகில் வாழ்ந்த தேவர் திருமகனார், வாழ்நாளின் பெரும் பகுதியை மக்களுக்காக, நாட்டுக்காக, சிறைச்சாலைகளிலேயே கழித்தவர் - நாடு விடுதலையடைந்தபோது எல்லைகளை வரையறுக்காமல் சுதந்திரம் பெறுவது தவறு என்றும் இன்று இல்லாவிட்டாலும், நாளை அல்லது நாளை மறுநாள் சீனாவால் நமக்கு ஆபத்து ஏற்படலாம், பாகிஸ்தானுடன் பகைமை வரலாம் என தீர்க்கதரிசனத்துடன் கூறியவர் தேவர் திருமகனார் - தனக்குச் சொந்தமான 32 கிராமங்களை நஞ்சை, புஞ்சை நிலங்களை சாதி பேதங்களுக்கு அப்பாற்பட்டு, தாழ்த்தப்பட்டவர் முதல் அனைத்து வகுப்பினருக்கும் அன்பு பரிசாய் வழங்கிய கருணை உள்ளம் கொண்டவர் தேவர் திருமகனார் என்றும் செல்வி. ஜெயலலிதா நினைவுகூர்ந்துள்ளார்.
அரசியலிலும் ஆன்மிகத்திலும் சுடர்விட்டு பிரகாசித்த தேவர் திருமகனார், மக்களுக்கு ஆற்றிய மகத்தான பணிகளைப் போற்றும் விதமாகத்தான் தமது தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. அரசு, 1994ம் ஆண்டு சென்னை நந்தனத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு வெண்கலச் சிலை அமைத்ததையும், அச்சிலை திறப்பு விழாவின்போது, கள்ளர், மறவர், அகமுடையார் என பிரிந்துள்ள முக்குலத்தோர் சமுதாயம் ஒரே குடையின்கீழ் வர வேண்டும் என்கிற உயரிய நோக்கில் அனைவரையும் தேவரினம் என்று தாம் அறிவித்ததுடன் அதற்கான அரசாணை வெளியிடச் செய்ததையும் செல்வி ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.
தேவர் பெருமகனாரின் கொள்கைகளையும், பெருமைகளையும் போற்றிப் பாதுகாப்பதோடு, தமிழகம் தலைநிமிர்ந்து நிற்க, தேசியமும், கலாச்சாரமும் தழைத்தோங்க, நாட்டு மக்களிடையே மத இன மோதல்கள் குறைந்து சகோதரத்துவம் வளர, இந்த நன்னாளில் உறுதி ஏற்போம் என்றும் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்

No comments:

Post a Comment