Saturday, July 7, 2018

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான இந்திய தேசிய ராணுவத்தில் கலந்து கொண்டவர் வியாசர்பாடியைச் சேர்ந்த வி.காந்தி (89) 37 ஆண்டுகளாக தியாகி ஓய்வூதியத்திற்காக அலைந்த 89 வயது முதியவரிடம் நீதிபதி மன்னிப்பு

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான இந்திய தேசிய ராணுவத்தில் கலந்து கொண்டவர் வியாசர்பாடியைச் சேர்ந்த வி.காந்தி (89)
37 ஆண்டுகளாக தியாகி ஓய்வூதியத்திற்காக அலைந்த 89 வயது முதியவரிடம் நீதிபதி மன்னிப்பு
புத்திசாலிகளாலும், கொள்கையில் இருமாப்புடன் உள்ளவர்களாலும்தான் நம்நாட்டில் சுதந்திர போராட்டம் மறைந்து வருகிறது என்பது
துரதிஷ்டவசமானது.
* சென்னை உயர் நீதிமன்றத்தில் உருக்கம்
* ஓய்வூதியத்தை வீட்டிற்கு சென்று வழங்க உத்தரவு
சென்னை: சுதந்திரப் போராட்டத் தியாகி ஓய்வூதியம் வழங்கக் கோரி 37 ஆண்டுகளாக அரசிடம் முறையிட்டும் பலன் இல்லாமல் கோர்ட் படியேறிவந்ததற்காக 89 வயது தியாகியிடம் நீதிபதி மன்னிப்பு கேட்டது உயர் நீதிமன்றத்தில் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சுதந்திரப்போராட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான இந்திய தேசிய ராணுவத்தில் கலந்து கொண்டவர் வியாசர்பாடியைச் சேர்ந்த வி.காந்தி (89). சுதந்திரப் போராட்டத்தின்போது ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு 1945 மே முதல் 1945 டிசம்பர் வரை ரங்கூன் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதையடுத்து, கடந்த 1980ல் தனக்கு சுதந்திரப்போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியத்தை வழங்கக்கோரி தமிழக அரசுக்கு மனு அனுப்பினார்.
அவரது மனு 12 ஆண்டுகளாகியும் பரிசீலிக்கப்படவில்லை. இதையடுத்து, மீண்டும் தமிழக அரசுக்கு 1992ல் மனு அனுப்பினார். அந்த மனுவும் பரிசீலிக்கப்படவில்லை. தியாகி வி.காந்தியுடன் சிறையில் இருந்த கே.காளிமுத்து என்பவர் வி.காந்தி சிறையில் இருந்ததற்கான சான்று வழங்கியுள்ளார். காளிமுத்து தியாகிகளுக்கான ஓய்வூதியம் வாங்கி வருகிறார். ஆனால், காந்திக்கு இந்த ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இந்திய தேசிய ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றி கலோனல் லட்சுமி சாகல் என்பவரும் வி.காந்திக்கு சான்றிதழ் கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து, அகில இந்திய சுதந்திரப்போராட்ட தியாகிகள் சங்கத்திந் தலைவர் கே.குருமூர்த்தியும் காந்திக்கு தியாகிக்கான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஆனால், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அவரது சுதந்திர போராட்டத்தை தமிழக அரசு அங்கீகரிக்கவில்லை. அவரது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து, அவர் தனக்கு தியாகிகளுக்கான ஓய்வூதியம் வழங்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு: மனுதாரர் வி.காந்தி சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்டு நாட்டு விடுதலைக்காக சிறை சென்றுள்ளார். அவர் தற்போது நிதிப் பிரச்னையில் உள்ளார். சுதந்திரப் போராட்ட தியாகிகளின் மனுவை வாங்கிக்கொண்டு அவர்களை காத்திருக்க வைக்கக்கூடாது.
மனுதாரரான முதியவரின் வயது குறித்து சில பிரச்னைகள் உள்ளதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அவரது குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை தாக்கல் செய்யப்படவில்லை என்றும் அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், மனுதாரரின் கோரிக்கையை இந்த இரண்டு ஆவணங்களுக்காக பரிசீலிக்காமல் அரசு இழுத்தடித்துள்ளது. மனுதாரருடன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவரும், அவரின் படையில் தலைமை வகித்தவரும் கொடுத்த சான்றுகள் போதுமானதாக உள்ள நிலையி–்ல தமிழக அரசு இயந்திரத்தனமாக அவரின் மனுவை நிராகரித்துள்ளது துரதிஷ்டவசமானது.
அவர்கள் ஏதாவது காரணத்தைச் சொல்லி தப்பிவிடுகிறார்கள். ஓய்வூதியம் தரக்கூடாது என்பதை மட்டும் நோக்கமாக கொண்டு தேவையில்லாத காரணங்களைக் கூறி ஒரு முதியவரின் கோரிக்கையை அரசு நிராகரித்துள்ளது. இதை இந்த நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எங்கள் மக்களிடம் நீங்கள் படும் துன்பத்தை பார்க்கும்போது என்னால் அவரிடம் மன்னித்துக்கொள்ளுங்கள் என்று மட்டுமே கேட்க முடியும். புத்திசாலிகளாலும், கொள்கையில் இருமாப்புடன் உள்ளவர்களாலும்தான் நம்நாட்டில் சுதந்திர போராட்டம் மறைந்து வருகிறது என்பது துரதிஷ்டவசமானது.
எனவே, மனுதாரரின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு அவரது வீட்டுக்கு சென்றே ஓய்வூதியத்தை வழங்கும் வகையில் உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும். இந்த நடவடிக்கை 2 வாரங்களுக்குள் செய்து முடிக்கப்பட வேண்டும். அவருக்கான நிலுவைத் தொகையை 4 வாரங்களுக்குள் தமிழக அரசு வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
கள்ளர்முரசு சுரேஷ்

No comments:

Post a Comment